Saturday 21st of December 2024 08:33:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
மனிதப் படுகொலைகளால் மகுடம் சூட்டிய மெதமுலான வம்சம் - நா.யோகேந்திரநாதன்

மனிதப் படுகொலைகளால் மகுடம் சூட்டிய மெதமுலான வம்சம் - நா.யோகேந்திரநாதன்


முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மூலம் மெதமுலான வம்சத்தைச் சேர்ந்த ராஜபக்ஷ் குடும்பத்தினர் உலகக் கொலைகார மனித குல விரோதிகள் பட்டியலில் தங்கள் பெயர்களையும் ஆழப்பதித்துக் கொண்டனர்.

60 இலட்சம் யூதர்களை ஜேர்மனிய வதை முகாம்களில் தடுத்து வைத்து சித்திரவதை செய்து கொன்று குவித்த ஹிட்லரைப் போல, தன்னை ஆட்சி பீடம் ஏற்றக் கரம் கொடுத்த சோஷலிஸ்டுகளைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றிய முசோலினியைப் போல, கொலைகளை ஒரு கலையாக விதம் விதமாகச் செய்து கூத்தாடிய இடி அமீனைப் போல, அதிகாரத்தைத் தக்க வைக்கும் ஒரே ஆயுதம் மனிதப் படுகொலைகளே என நம்பிய முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் போல், அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயா, சின்கா இன மக்களை இன அழிப்புச் செய்து நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களைப் போல்-உலக மனிதப் படுகொலையாளர்கள் பட்டியலில் தலைசிறந்த இன அழிப்பாளர்கள் வரிசையில் ராஜபக்ஷ் சகோதரர்கள் தங்களுக்கெனத் தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

உயிரைக் காக்க ஒவ்வொரு இடமாக ஓடியோடி இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் 4 கி.மீ. நீளமும் 3 கி.மீ. அகலமும் கொண்ட மாத்தளன் - முள்ளிவாய்க்கால் சிறிய பரப்பில் ஒதுக்கிவிட்டு விமானக் குண்டுகளாலும் எறிகணைகளாலும் தொலைதூரத் துப்பாக்கி வேட்டுகளாலும் கொன்று குவித்து மகிழ்ச்சிக் கூத்தாடிய பெருமை ராஜபக்ஷ் சகோதரர்களுக்கே உரியதாகும்.

ஒரு சில நாட்களிலேயே முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்திற்குள் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது ஐக்கிய நாடுகளின் செயற்கைக் கோள் வெளியிட்ட கணக்கு.

அதற்காக ராஜபக்ஷக்கள் வெட்கப்படவில்லை. மாறாகப் பெருமைப்பட்டார்கள். தாங்கள் நடத்தியது போரல்ல, மனிதாபிமான நடவடிக்கையென மாய்மாலம் கொட்டினர். தாங்கள் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்த ரட்சகர்கள் என மார்தட்டினர்.

அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையும் மீட்டெடுப்பும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்பில், உடல் ஊனங்களில், பட்டினியில் பசியில் தாங்க முடியாத அவலங்களில் பிறப்பெடுத்தவையாகும்.

வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வெற்றிச் செய்தி கேட்டு நாடு திரும்பி விமான நிலையத்தில் கால் பதித்ததும் மண்ணை முத்தமிட்டு வணங்கி விட்டு “எனது முதலாவது தெரிவும் இரண்டாவது தெரிவும் மூன்றாவது தெரிவும் தாய் நாடே” என்றார். பின்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற வெற்றி விழாவில் இனி இந்த நாட்டில் “பெரும்பான்மை சிறுபான்மை என எவருமில்லை, “எல்லோரும் ஒரே நாடு, ஒரே மக்கள்” என்றார்.

அதாவது “இனி இந்த நாட்டில் தமிழர், முஸ்லிம்கள் என சிறுபான்மை இனங்கள் இல்லை, எல்லோரும் சிங்களவர்களே!” என்ற உள்ளார்த்தத்துடன் அவர் சொன்னதை, எதிர்காலத்தில் எல்லோரும் சிங்கள மயப்படுத்தப்படுவர் என்பதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் ராஜபக்ஷ் சகோதரர்களின் ஒவ்வொரு நகர்வுகளும் போகப்போக அதைப் புலப்படுத்தின.

ஆரம்பத்தில் ஒரே நாட்டுக்குள் உரிமையுள்ள மக்களாக வாழ்வதைத் தானே தமிழ் மக்கள் கோரினார்கள். அஹிம்சை வழியில் போராடினார்கள். இணங்கப்பட்ட ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். அஹிம்சைப் போராட்டத்திற்கு இனப்படுகொலைகளால் பதிலளிக்கப்பட்டன. எனவே தான் தமிழ் மக்கள் தனிநாடு கோரி ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் நிலத்தைக் கேட்கவில்லை, ஆறுகளில் ஓடும் நீரைக் கேட்கவில்லை. ஓங்கி வளர்ந்த சிங்களத்தின் அடர் வனங்களைக் கேட்கவில்லை.

பரம்பரைபரம்பரையாக தாங்கள் உழுதுண்டு செழிப்புடன் வாழும் தங்கள் மண்ணைத்தான் கேட்டார்கள். அதற்குப் பிரிவினைவாதமென்றும் பயங்கரவாதம் எனவும் பெயர் சூட்டி, தமிழ் மக்களின் தலைக்கு நேரே துப்பாக்கிகளை உயர்த்தினர்.

தமிழ் மக்கள் தங்களுக்கே உரித்தான உரிமையைத் தானே கோரினார்கள்? அதற்குச் சிங்கள தேசம் தந்த பதில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிப்பாகும்.

30 வருடங்களாகத் தமிழ் மக்கள் தம் உழைப்பைக் கொடுத்துத் தேடிய சொத்துக்களை இழந்து, உடல் ஊனங்களையும் பொருளாதாரத் தடைகளின் கொடுமைகளையும் அனுபவித்து, உயிர்களையும் அர்ப்பணித்து முன்னெடுத்த விடுதலைப் போராட்டம் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் பேரிழப்பை எதிர்கொண்டது. இலங்கை அரசின் நயவஞ்சகம் 23 நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு எல்லாம் சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவைத்தன.

மஹிந்த ராஜபக்ஷ் போரை வெற்றி கொண்ட சக்கரவர்த்தியாகவும் கோத்தபாய ராஜபக்ஷ் போரை வழிநடத்திய தளபதியாகவும் தம்மை வீரநாயகர்களாக்கி வீறு நடைபோட்டனர். போரால் வெற்றி கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீது மேலும் மேலும் நில ஆக்கிரமிப்பு, வணக்க ஸ்தலங்களுக்கு உரிமை கொண்டாடுவது, பொருளாதார மேலாதிக்கம் எனப் பல வழிகளிலும் ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன. அவ்வாறே பள்ளிவாசல்கள் மேல் தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள், குடியிருப்புகள் மேல் தாக்குதல்கள், இன அழிப்புக் கலவரங்கள் என முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

அதாவது ஒரே நாடு ஒரே மக்கள் என்ற கோஷத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

மெதமுலான சகோதரர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பி சிங்கள மக்களும் “ஒரே நாடு, ஒரே மக்கள்” என்ற சுலோகத்தின் பின் அணி திரண்டனர்.

2020ல் கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ் பிரதமராகவும் பதவியேற்ற பின்பு மெல்ல மெல்ல ராஜபக்ஷ்க்களின் உண்மையான உருவத்தைச் சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

நாட்டுக்குப் பயன் தராத பிரமாண்டமான திட்டங்கள், தேசிய உற்பத்திகளில், அக்கறையின்மை, பிரமாண்டமான கட்டிடங்களாலும் நெடுஞ்சாலைகளாலும் நாட்டை அழகுபடுத்தல், பெருந்திட்டங்களை நிறைவேற்றப் பெற்ற பெருந்தொகை கடன்கள், அவற்றுக்கு தவணைப் பணமும் வட்டியும் கட்டமுடியாமை என்பனவற்றால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது.

அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விலைகளும் பல மடங்கு அதிகரித்தன. ஆனால், ராஜபக்ஷ் சகோதரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் லஞ்சம், ஊழல், மோசடி, தரகுப் பணம், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றால் கோடிகோடியாகச் சம்பாதிதத்தனர்.

இந்த நிலையில் ராஜபக்ஷ் சகோதரர்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதியின் மீரிஹான வீட்டைச் சுற்றி வளைத்துப் போராட்டம், காலிமுகத்திடலில் “கோத்தா வீட்டுக்குப் போ” போராட்டம், அலரி மாளிகையருகில் “மைனா வீட்டுக்குப் போ” போராட்டம், நாடாளுமன்ற வாசலில் “திருடர்களே வீட்டுக்குப் போங்கள்” என்ற போராட்டம் என மக்களின் போராட்டம் பல்வேறு முனைகளிலும் வெடித்தன.

மே 6ம் திகதி இடம்பெற்ற நாடு பரந்த ஹர்த்தால் போராட்டம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்ததுடன் அரசாங்கத்தையும் திணறடிக்க வைத்தது. அலரி மாளிகையில் ஒன்று கூடிய மஹிந்தவின் அடியாட்கள் 9ம் திகதி காலிமுகத் திடல் போராட்டக்காரர் மீது தாக்குதலை நடத்தினர். அதனால் மக்கள் பொங்கியெழுந்து எதிர்த்தாக்குதல் தொடுத்த நிலையில் பிரதமர் மஹிந்த ஒளித்து ஒடவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்சமயம் திருகோணமலை கடற்படை முகாமில் அடைக்கலம் கோரி அங்கு தங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் போர் வெற்றியை ராஜபக்ஷ் சகோதரர்கள் கொண்டாடி நாயகர்களாக வலம் வந்த போது சிங்கள மக்கள் பால் சோறு வழங்கிக் கொண்டாடினார்கள். இன்று அதே சிங்கள மக்கள் முன் வரமுடியாது மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று முள்ளிவாய்க்காலில் உரிமை கோரிப் போராடிய தமிழ் மக்களைக் கொன்று குவித்த அதே ராஜபக்ஷ் சகோதரர்களின் துப்பாக்கி தான் உரிமை கோரிப் போராடும் சிங்கள மக்களை நோக்கியும் நீளுகிறது.

ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக சாதாரண ஒடுக்கப்படும் மக்களின் ஒரு பகுதியினரைத் தங்கள் பின்னால் அணி திரட்டுவார்கள். பின்பு தேவை வரும் தங்களுக்குப் பின்னால் அணி திரட்டிய மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியைத் தூக்குவார்கள்.

தமிழ் மக்களுக்கெதிரான போரின் வெற்றியை பல்சோறு வழங்கிக் கொண்டாடிய அதே சிங்கள மக்களுக்கு எதிராகவே மெதமுதலான துப்பாக்கிகள் இன்று தோட்டாக்களை கக்குகின்றன. “ஒரே நாடு, ஒரே மக்கள்”, கோஷம் எங்கோ காணாமற் போய்விட்டது.

எனவே முள்ளிவாய்க்கால் நினைவுகள் தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என சகல ஒடுக்கப்படும் மக்களுக்கும் உரியவை. நாம் அனைவரும் ஒன்றிணையும் போது எம்மை இன, மத அடிப்படையில் பிரித்து எம்மை ஒடுக்கும் அநீதியை உடைத்தெறிய முடியும்.

தமிழர்கள் தமிழர்களாகவும் சிங்களவர்கள் சிங்களவராகவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் ஒன்றிணையும்போது இலங்கையர்களாகச் சுபீட்சத்தை நோக்கி முன் செல்லமுடியும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

18.05.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், கொழும்பு, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE